June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது

புது தில்லி, ஏப்.27

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் ஜூலை மாத இறுதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக அச்செய்தியில் தெரியவந்துள்ளது.

நாட்டில் கோவிட் பரவல் அதிகரிப்பு காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தியை துவக்க அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையில் நீதிபதிகள் உற்பத்தியை துவக்க அனுமதி வழங்கினர். முன்னதாக நடந்த விசாரணையில் ஆலையை இயக்க எத்தனை நபர்கள் தேவை என்பதை கண்காணிப்பு குழு முடிவு செய்யும். மேலும் கண்காணிப்பு குழுவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக பிரநிதிகள் இடம்பெறுவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் ; கண்காணிப்பு குழுவில் உள்ளூர் நபர்கள் யாரும் இடம்பெறக்கூடாது. இங்கு உற்பத்தி ஆகும் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு மட்டுமே வழங்க வேண்டும் என தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டிய சூழல் உள்ளது. அனைத்து மக்களுக்கும் ஆக்ஸிஜன் இலவசமாக வழங்குவோம் என வாதிட்டார். இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு வழக்கறிஞர், ஆம் இது தேசிய அளவிலான பிரச்சனை என்றும், உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை மத்திய அரசு கையாளும் என்ற உத்தரவு உள்ளதே என்றும் தெரிவித்தார்.

வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவு அளிப்பது போல் மத்திய அரசின் போக்கு உள்ளது அதிர்ச்சியாக இருப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் ஆக்சிஜனில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்தால் போதும் என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை முடிவில் ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. உயிர் காக்கும் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், தாமிர ஆலைக்குள் செல்லக்கூடாது என்றும், தமிழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 3 பேர் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்தனர். மேலும், தமிழக மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Spread the love