May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மத்திய அரசு கொள்முதல் செய்ய திட்டம்

புது தில்லி, ஏப்.29

மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து, எளிதாக எடுத்துச் செல்லும் வகையிலான ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்களை கொள்முதல் செய்யவும், புதிதாக 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பை குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்களை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து விரைந்து கொள்முதல் செய்ய இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தினார்.

மேலும், பிஎம்கேர்ஸ் நிதியிலிருந்து புதிதாக 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஏற்கெனவே 713 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக 500 நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும், கூடுதலாக 500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பை குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.

Spread the love