ஜெனீவா, மே 10
முன்னேறிய நாடுகளில் கோவிட் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: உலகம் முழுவதும் கோவிட் தொற்றுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன.
ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இன்னும் தடுப்பூசியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. அங்கு ஏராளமானோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வட மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள சாட் நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தெரிவித்துள்ளதாவது:
இந்த நாட்டில் கோவிட் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு கூட வைரஸ் தடுப்பூசி கிடைக்கவில்லை. வளமான நாடுகள் தங்களுக்காக தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஆனால் சாட் போன்ற ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை.
ஆப்பிரிக்காவில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி இதுவரை கிடைக்கவில்லை. பெரும்பாலான முன்னேறிய நாடுகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்ற செய்தி கிடைத்துள்ளது.
இது குறித்து டபிள்யூஎச்ஓ நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்று டபிள்யூஎச்ஓ தெரிவித்துள்ளது. சாட் நாட்டில் கோவிட் வைரஸ் பரவியது முதல் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு மேலும் 4,835 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.