சென்னை, மே 26
தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடிநிலங்கள், 127 உப விளை நிலங்கள் என வகைபடுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் மாநிலத்தின் சராசரி மழை 960 மி.மீ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்மேற்கு பருவமழை மூலம் சராசரி 439 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் சராசரி 440 மி.மீட்டர் மழை கிடைப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், மேற்பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க தானியங்கி மழை மானிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 1,166 பிர்காக்களில் 1,000 பிர்காக்களில் மழைமானி அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை டெண்டர் வெளிப்படை தன்மை சட்டம் 2000-ன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்றி தானியங்கி மழை மானிகளை கொள்முதல் செய்தல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தது.