ஜெனீவா, மே 19
கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா தொடர்ந்து மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் கடந்த ஒரு வாரத்தில் தொற்று 13 சதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த வாரத்தில் புதிதாக 23 லட்சத்து 87 ஆயிரத்து 663 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு என்பது 16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும்.
உலக நாடுகளில் கடந்த வாரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 13% குறைந்துள்ளது. ஆனால், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாதிப்பின் அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த 16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தோடு ஒப்பிட்டால், பிரேசிலில் 4.37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் (3% அதிகம்). அமெரிக்காவில் 2.35 லட்சம் பேர் (21% அதிகம்), அர்ஜென்டினாவில் 1.51 லட்சம் பேர் (8% அதிகம்), கொலம்பியாவில் 1.15 லட்சம் பேர் ( 6% அதிகம்) பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் தற்போது, இந்த தொற்றால் 2.54 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.83 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4ம் தேதி இந்தியாவில் தொற்று 2 கோடியை எட்டிய நிலையில் அடுத்த 15 நாட்களில் 54 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.