May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

லிடார் தொழில்நுட்பத்தில் மின்சார கார்

லிடார் சென்சிங் தொழில்நுட்பத்தில் முதல் மின்சார கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் இந்த மின்சார காரை தயாரித்து வருவதாக தெரிகிறது.

‘எக்ஸ்பெங் பி5’ என்ற பெயரில் இந்த மின்சார கார் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஷாங்காய் மோட்டார் வாகன கண்காட்சியில் இக்காரை காட்சிப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தக் காரின் அறிமுகம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது எக்ஸ்பெங் நிறுவனம்.

அத்துடன் இந்தக் கார் தொடர்பான புகைப்படம், வீடியோ மற்றும் முக்கிய தகவல்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் இணையத்தில் வெளியான உடனேயே கார் பிரியர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்தக் காரின் முகப்புப் பம்பரின் இரு முனைகளில் லிடார் (LiDAR) சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பாதசாரிகள், பிற வாகனங்கள், சாலையோர பணிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் கண்காணித்து ஓட்டுநரை அலர்ட் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் லிடார் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் உலகின் முதல் மின்சார காராக இது இருக்கும்.

அத்துடன் 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், சிறிய ஃப்ரிட்ஜ் போன்ற பிரீமியம் அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்டைலான அலாய் வீல்கள், தின் லைன் எல்இடி ஆகியவற்றுடன் இந்தக் காரின் தோற்றம் கவர்ச்சிகரமாக உள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்குப் பிறகு கவனம் ஈர்க்கும் மின்சாரக் காராக எக்ஸ்பெங் பி5 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love