May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

155 ஆக்சிஜன் மினி ஆலைகள் அமைகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை

தமிழகத்தில் 155 ஆக்சிஜன் மினி ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தொழில்துறையினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில் முதல்வர் இதனைத் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் தினசரி ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்று ஆக்சிஜன் நிலையங்கள் மூலம் 15 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சிப்காட் மூலம் சுமார் 7500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன. சிப்காட் நிறுவனம் இதுவரை 500 சிலிண்டர்களை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாகக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் 1650 சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்படுகின்றன. மேலும் CII மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் மூலமாக சுமார் 500 சிலிண்டர்கள் நம் மாநிலத்திற்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இம்மாநிலத்தின் தொழில் நிறுவனங்களின் மூலம் 13 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துடன் இணைந்து DRDO அமைப்பு 142 மினி ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறது. தமிழ்நாடு அரசு தற்போது இப்பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இது தவிர 3.5 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சிக்கலான இக்காலகட்டத்தில் அரசோடு தோள் கொடுத்து நிற்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும், தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். தற்போது இந்த நிதிக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் (TNMSC), சிப்காட் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை மேற்கொள்ளும் கொள்முதல்களின் செலவினங்களை நேரடியாக அந்தந்த விற்பனையாளர்களுக்கு நீங்கள் செலுத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Spread the love