June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் தகவல்

சென்னை, ஜூன் 14

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 4 நாட்களை வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தது.

ஜூன் 17ல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல் அளித்தது. ஜூன் 18ல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, கோவை, தேனியில் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.

மேலும் 15, 16, 17, 18ம் தேதிகளில் இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Spread the love