புது தில்லி, ஏப்.30
நாட்டில் நிலவி வரும் மருத்துவ நெருக்கடியை கருத்தில் வைத்து, 17 விதமான மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியில், மூன்று மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட இச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்கவும், இறக்குமதி செய்யப்படும் உபகரணங்கள் தேவை இருப்போரை சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில், இறக்குமதிக்கான சட்டதிட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆக்சிஜன் செறிவூட்டிகள், நெபுலைசர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளிட்ட, 17 வகையான மருத்துவ உபகரணங்களை, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், சுங்கத்துறை அனுமதி பெற்ற பின், இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் என்னென்ன, அவற்றின் எண்ணிக்கை உள்ளிட்ட இதர விபரங்களை, விற்பனைக்கு முன், மாநில அரசுகளிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த, 17 வகையான மருத்துவ உபகரண ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.