June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

2000 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க என்எல்சி திட்டம்

சென்னை, ஏப்.22

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்காக தமிழக மின் வாரியம் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: என்டிபிசி, என்எல்சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மாநில மின் வாரியங்களுடன் இணைந்து பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் என்எல்சி நிறுவனம் 2000 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை. அந்த நிலத்தை மின் வாரியம் வாங்கி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: என்எல்சி மின் நிலையமும் தமிழக மின் வாரியமும் கூட்டு நிறுவனத்தின் வாயிலாக 2000 மெகாவாட் திறனில் பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க உள்ளன. மொத்தம் 2000 மெகாவாட் மின் நிலையத்தை ஒரே இடத்தில் அமைக்க 10 ஆயிரம் ஏக்கர் தேவை. அந்த அளவிற்கு ஒரே இடத்தில் நிலம் கிடைக்குமா என தெரியவில்லை.

இல்லையேல் ஒரு இடத்தில் குறைந்தது 250 மெகா வாட் திறனில் மின் நிலையம் அமைக்கப்படும். அதற்கு 500 ஏக்கர் தேவை. எனவே குறைந்தது 500 ஏக்கர் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ஏக்கர் வரை வாங்கப்பட உள்ளது.

மேலும், நிலம் வழங்குவோருக்கு சந்தை மதிப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும், என்எல்சி அமைக்கும் சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love