ஹோண்டா நிறுவனம் வரும் 2022ம் ஆண்டுக்கான சிவிக் கார் மாடலை வெளியீடு செய்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று சிவிக். இந்த மாடலில் தொடர்ச்சியாக அப்டேட்களைச் செய்து வந்துள்ளது அந்த நிறுவனம். இந்த நிலையில் தற்போது 11வது தலைமுறை சிவிக் மாடலை உலக அளவில் வெளியிட்டுள்ளது.
இந்தக் கார் அடுத்த ஆண்டே விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் ஹோண்டா வெளியிடவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக்கார் முதல்முறையாக காட்சிப் படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்தக் காரில் செய்யப்பட்டிருக்கும் அப்டேட்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக காரின் இண்டீரியர், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் என்ஜினில் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளையில் காரின் வெளிப்புற தோற்றத்திலும் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தக் காரின் தோற்றத்தை ஸ்போர்ட்ஸ் காரைப் போன்ற தோற்றத்திற்கு மேம்படுத்தியுள்ளது.
இந்தக் காரின் பின்புற பேனட் நீளம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயரம் மற்றும் அகலத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
உட்பகுதியில் புதிதாக ஏர் வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும், 9.0 இன்ச் போஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டமும் ஆப்சனலாக தரப்படுகிறது.
அத்துடன் லேன் அசிஸ்ட், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், சோனார் சென்சார் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்தக் காரில் 2.0 நேட்சுரல் அஸ்பயர்ட், 4 சிலிண்டர் டிஓஎச்சி ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 158 பிஎச்பி பவர் மற்றும் 187 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும் ஆப்சனலாக 1.5 லிட்டர் விடெக் டர்போ, 4 சிலிண்டர் என்ஜின் தரப்படுகிறது. இது 180 எச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.