நியூயார்க், ஏப்.21
கோவிட் தொற்று பேரிடரால் 2030க்குள் பட்டினியை ஒழிக்க நாம் எடுத்துவரும் முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என ஐநா மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: ஐக்கிய நாடுகள் சபையில் மக்கள் தொகை உணவுப்பாதுகாப்பு ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் 54வது மாநாடு அண்மையில் நடந்தது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொளி காட்சி மூலம் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த வியங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறது. இதில் எந்த விதத்திலும் சமரசம் செய்ய மாட்டோம். கடந்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய அளவிலான திட்டங்கள் அதற்கு சிறந்த சான்று. இதேபோல் விவசாயிகள், தினக்கூலிகள், பெண்கள், சுய உதவி குழுக்கள், ஏழை குடிமக்கள் உள்ளிட்டோருக்கு இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.
மேலும், இந்த கோவிட் நெருக்கடி காலத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் போதிய உணவும் ஊட்டச்சத்தும் கிடைக்காமல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகில் பசி பட்டினியை ஒழிக்க நாம் எடுத்து வரும் முயற்சிகள் வீணாகும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.