புது தில்லி, மே 3
நாட்டின் பல பகுதிகளில் 3,200 படுக்கைகளுடன், 213 கொவிட் சிகிச்சை தனிமை ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் திறனை வலுப்படுத்த, சுமார் 4,000 கொவிட் சிகிச்சை தனிமைப் பெட்டிகளை, 64,000 படுக்கைகளுடன் இந்திய ரயில்வே தயார் நிலையில் வைத்துள்ளது.
தற்போது, மாநிலங்களின் கோரிக்கைப்படி 213 தனிமைப் பெட்டிகள், 3,400 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சைக்காக பல்வேறு மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிமைப் பெட்டிகள் தற்போது தில்லி, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில், தனிமைப் பெட்டிகளை அனுப்பும்படி நாகாலாந்து அரசும் கோரிக்கை விடுத்துள்ளது. அதனால், திமாபூருக்கு 10 தனிமைப் பெட்டிகளை அனுப்பும் பணியில் ரயில்வே துரிதமாக செயல்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 5 இடங்களில் 50 தனிமைப் பெட்டிகளை ரயில்வே நிறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினரின் வேண்டுகோளின்படி, தனிமைப் பெட்டிகள் நந்துருபரிலிருந்து பால்கருக்கும் அனுப்பப்படுகின்றன. ஜபல்பூருக்கும் தனிமைப் பெட்டிகள் அனுப்பப்படுகின்றன. தில்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மற்றும் மகாராஷ்டிராவில் பயன்பாட்டில் உள்ள தனிமைப் பெட்டிகளின் நிலவரம்:
மகாராஷ்டிரா நந்துருபரில் கடந்த சில நாட்களாக 6 பேர் தனிமைப் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு 35 கோவிட் நோயாளிகள் தனிமையில் உள்ளனர். மொத்தம் இங்கு 95 பேர் அனுமதிக்கப்பட்டு 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு 343 படுக்கைகள் இன்னும் காலியாக உள்ளன. நாக்பூரில் 11 கொவிட் சிகிச்சைப் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டி மருத்துவப் பணியாளர்களுக்கும், விநியோகப் பொருள்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் இந்தூர் அருகே 22 ரயில் பெட்டிகள் 320 படுக்கை வசதிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு இதுவரை 12 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போபாலில் 20 ரயில் பெட்டிகள் உள்ளன. இதில் 308 படுக்கைகள் காலியாக உள்ளன. இங்கு 21 பேர் அனுமதிக்கப்பட்டனர். 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 275 படுக்கைகள் காலியாக உள்ளன.
தில்லியில் உள்ள 2 ரயில் நிலையங்களில் 75 பெட்டிகள் 1200 படுக்கைகளுடன் உள்ளன. இங்கு இதுவரை 4 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இங்கு 1196 படுக்கைகள் காலியாக உள்ளன.
மேற்கண்ட மாநிலங்களில் உள்ள தனிமைப் பெட்டிகளில் மொத்தம் 123 பேர் அனுமதிக்கப்பட்டு, 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 61 பேர் தனிமைப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தம் 3200 படுக்கைகள் காலியாக உள்ளன.
150 ரயில் பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் படி அசாம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.