August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

3 தினங்களுக்கு கன மழை பெய்யும்

சென்னை, மே 13

தமிழகத்தின் பல மாவட்டங்களில், மூன்று நாட்களுக்கு கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யும். எனவே, விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மேலடுக்கு சுழற்சியால், தமிழக வளிமண்டல பகுதியில் 1.5 கி.மீ., உயரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வரும் 16ம் தேதி வரை, பல மாவட்டங்களில் கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யும்.

நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில், இடி, மின்னலுடன், மணிக்கு 40 கி.மீ., வேகம் வரை காற்று வீசும். கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மே 15, 16ல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 கி.மீ., வேகம் வரை காற்று வீசும். கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 15, 16ம் தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதை தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாகவும் வலுப்பெறும்.

இதன் காரணமாக குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Spread the love