உலகின் மிகப்பெரிய முதலீட்டு சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜேபி மோர்கன் சாச்ஸ், இந்தியாவில் கொரோனா நிவாரண நிதியாக
16 மில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதில் சுமார் 3.8 மில்லியன் டாலர் தொகையை ஊழியர்களுக்காக மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளதாக தற்போது அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 35,000 ஊழியர்கள் உள்ளனர். இந்தியாவுக்கான சேவைகள் மட்டுமல்லாமல் உலக அளவிலான சேவைகளையும் இந்தியாவிலிருந்து அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து 3.8 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊழியர்களின் பொருளாதார மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக 3.8 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதியே 2 மில்லியன் டாலர் தொகையை இந்திய மக்களுக்கு உதவுவதற்காக மோர்கன் சாச்ஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகை வாயிலாக ஊழியர்களுக்கு மருத்துவ உதவி, 24X7 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ நிறுவனங்களுடன் கூட்டுறவு, ஹோட்டல், மருத்துவமனை, வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், டாக்டர் ஆன் கால் வசதி, தடுப்பு மருந்து ஆகியவற்றை 35,000 ஊழியர்களுக்கும் சென்றடைய வேண்டும் என ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவரான பிலிப்போ கோரி தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்தியாவில் தனது ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்திய மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து பெற வேண்டும் என்பதற்காக அரசுக்குப் பல வகையில் உதவி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேபி மோர்கன் சாஸ் நிறுவனம் இந்த உதவிகளை ஒவ்வொரு ஆண்டும் செய்யும் 32 மில்லியன் டாலர் மதிப்பிலான நன்கொடை செயல்களுக்குக் கீழ் செய்கிறது.