January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

4வது காலாண்டில் ஃபெடரல் வங்கி ஒட்டுமொத்த நிகர லாபம் 58 சதம் அதிகரிப்பு

மும்பை, மே 18

4-வது காலாண்டில் ஃபெடரல் வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாகியுமான சியாம் ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4வது காலாண்டில் வங்கி ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.521.24 கோடியை ஈட்டியது. அதேபோன்று, வங்கி ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபமும் 58 சதம் உயர்ந்து ரூ.477.81 கோடியை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில், கடன் வளர்ச்சி விகிதம் 9 சதமாக இருந்ததையடுத்து வங்கியின் நிகர வட்டி வருவாய் 17 சதம் அதிகரித்து ரூ.1,420 கோடியானது. அதேநேரம், இதர வருவாய் ரூ.711 கோடியிலிருந்து சரிவடைந்து ரூ.465 கோடியானது.

கடந்த முழு நிதியாண்டில் தனிப்பட்ட முறையில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.1,542 கோடியிலிருந்து ரூ.1,590 கோடியாக அதிகரித்துள்ளது. கோவிட் இரண்டாவது அலை காரணமாக புதிய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு வங்கியின் வர்த்தகத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வங்கியின் மொத்த வர்த்தகம் 10.91 சத வளர்ச்சியைப் பெற்று ரூ.3 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது. கடன் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை தங்க நகைக் கடன் வழங்கியுள்ளது. அப்பிரிவிலான கடன் 70 சதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், பெருநிறுவனங்களுக்கான கடன் 5 சதம் சரிந்துள்ளது. நடப்பு 2021-22ம் நிதியாண்டில் தங்க நகைக் கடன் வர்த்தகத்தை 25-30 சதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Spread the love