ஃபுல் சார்ஜில் 700 கி.மீ. பயணம் செய்யும் திறனுடன் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.
சொகுசு வாகனங்கள் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் மெர்சிடிஸ் நிறுவனமும் ஒன்று.
இந்தியச் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் இக்யுஎஸ் என்ற பெயரில் செடான் வடிவ எலெக்ட்ரிக் காரை மெர்சிடிஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்யு சீரிஸில் ஏற்கனவே இக்யுஏ, இக்யுபி, இக்யுவி, ஏஎம்ஜிஇக்யு ஆகிய கார்களை மெர்சிடிஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் முழு அளவிலான எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபாரத்தைச் சார்ந்து உருவாக்கப்படும் முதல் தயாரிப்பு இக்யுஎஸ் ஆகும். மெர்சிடிஸ் லோகோ உடன் இந்த எலெக்ட்ரிக் கார் மூடிய கிரில் அமைப்பை கொண்டுள்ளது.
ஸ்வெப்ட்பேக் தோற்றத்தில் ஏரோடைனமிக்ஸ் அம்சங்களுக்கு இணக்கமாக இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரின் டேஷ்போர்டில் 55 இன்ச் சென்டர் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கன்சோலில் எம்பெக்ஸ் எனக் குறிப்பிடப்படும் ஹைப்பர் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது.
இக்யுஎஸ் எலக்ட்ரிக் காரில் இரண்டு பேட்டரி ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேட்டரிகள் ஃபுல் சார்ஜில் அதிகபட்சமாக 700கிமீ வரையில் பயணிக்க உதவும். மேலும், இந்தக் காரில் 100 கி.மீ. வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்ட முடியும்.
இந்திய சந்தையில் நடப்பாண்டுக்குள் 7 புதிய ஏஎம்ஜி கார்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் சில கார்களை மஹாராஷ்டிராவில் உள்ள ஆலையில் தயாரிக்கவும், சில ஏஎம்ஜி கார்களை இறக்குமதி செய்யவும் மெர்சிடிஸ் எண்ணியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.