August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

75வது ஆண்டு சுதந்திர தின அமிர்த பெருவிழாவை முன்னிட்டு நீர் வள நில வளத் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகள்

இராமநாதபுரம், ஆக. 3

இராமநாதபுரம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக கோவை, நீர் நுட்ப மையத்துடன் இணைந்து நீர்வள நிலவளத் திட்டம் கடந்த நான்கு வருடமாக நயினார் கோவில் வட்டார பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுங்குறிச்சி, உடையார் குடியிருப்பு, ளு.ஏ.மங்களம், பாண்டியூர், கார்குடி, மும்முடிச்சாத்தான், சின்னஅக்கிரமேசி, அரசடி வண்டல் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடமாக மும்முடிச்சாத்தான் கிராமம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் வழங்குதல், இடுபொருள்கள் வழங்குதல், செயல் விளக்கங்கள், வயல் விழாக்கள் மற்றும் கண்டுணர்வு சுற்றுலா மூலம் தொழில் நுட்ப பார்வையிடல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வகையில் மாதிரி கிராமத்தில் 75வது ஆண்டு சுதந்திர தின அமிர்த பெருவிழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி மற்றும் உருவ பொம்மைகள் செய்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. முனைவர் தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முனைவர் ஆ.சுந்தர், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். மும்முடிச்சாத்தான் கிராம பஞ்சாயத்து தலைவர் கலந்து கொண்டு சுதந்திர போராட்டத்தில் இக்கிராமத்தின் பங்கு குறித்து உரையாடினார். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேம்பு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை, தொழில் நுட்ப உதவியாளர் வி.சரவணன் மற்றும் தொழில்நுட்ப அலுவலர் வெ.வித்யா சிறப்பாக செய்திருந்தனர்.

Spread the love