புது தில்லி, மே 15
தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிரான நாட்டின் போரில் ஒன்று திரண்டுள்ள பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்கள், இந்திய மருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகம், விநியோகஸ்தர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள், இணைந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். 2021 மே 13 வரை, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் விதத்தில் 36 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 7733 பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.
1449 மருந்துகள் மற்றும் 204 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்களில் விற்பனைக்காக உள்ளன. நாடு முழுவதும் உள்ள பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் உள்ளிட்ட இதர பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. சிறந்த தரமிக்க என்-95 முகக் கவசங்கள் மக்கள் மருந்தகங்களில் வெறும் ரூபாய் 25-க்கு கிடைக்கின்றது. தற்போதைய நிதி ஆண்டான 2021-22-ல், 2021 மே 13 வரை, ரூபாய் 80.18 கோடி விற்பனையை இந்திய மருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகம் செய்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சுமார் ரூபாய் 500 கோடி அளவுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
பொது முடக்கத்தின் போது தொடர்ந்து இயங்கிய இந்த மருந்தகங்கள், அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து பணியாற்றின. பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு மருந்தானது, முன்னணி மூன்று மருந்துகளின் விலையில் சராசரியாக அதிகபட்சம் 50 சதவீதம் இருக்கும். இதன் காரணமாக, மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விலைகள் குறைந்தபட்சம் 50% குறைவாகவும் அதிகபட்சம் சந்தை விலைகளை விட 80% முதல் 90% வரை குறைவாகவும் கிடைக்கின்றன.