புது தில்லி, ஏப்.24
கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 800எம்டி பைக் குறித்த விபரங்களை சிஎஃப் மோட்டோ வெளியிட்டுள்ளது. சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனத்திற்கும், ஆஸ்திரியாவின் கேடிஎம் நிறுவனத்திற்கும் இடையில் பரஸ்பர கூட்டணி உள்ளது. இதன் காரணமாக சில மோட்டார்சைக்கிள்களை கேடிஎம் பைக்குகளின் அடிப்படையில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் உருவாக்கி வருகின்றது.
இந்த வகையில் தற்போது மிடில்வெய்ட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக சிஎஃப் மோட்டோ 800எம்டி, இந்த கூட்டணியில் இருந்து வெளிவந்துள்ளது. என்ஜின் உள்பட இந்த புதிய பைக் பெரும்பான்மையாக கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த சிஎஃப் மோட்டோ அட்வென்ச்சர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 799சிசி எல்சி8 இணையான-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி மற்றும் 78 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு பயணங்களுக்காக மட்டுமில்லாமல், இந்த சிஎஃப் மோட்டோ அட்வென்ச்சர் பைக்கை பொது சாலைகளிலும் பயன்படுத்தலாம். அதற்கு ஏற்றாற்போல் தான் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கை போல் அல்லாமல் இந்த சிஎஃப் மோட்டோ பைக்கில் பெட்ரோல் நன்கு உயரமாக வழங்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்பக்கத்தில் 19 இன்ச் மற்றும் 17 இன்ச்சில் சக்கரங்களை பெற்றுவந்துள்ள இந்த அட்வென்ச்சர் பைக் இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ், எஃப் 850 ஜிஎஸ் மற்றும் ட்ரையம்ப் டைகர் 900 பைக்குகளுக்கு போட்டியாக 800எம்டி இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்படலாம்.