September 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

9 விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு

சென்னை

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாமல் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம் எனவும், உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறை அக்டோபர் 16 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள் எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகள் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்; தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்; வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு விதிகளை வேட்பாளர்கள் மீறினால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கால அட்டவணை

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – செப்டம்பர் 12

வேட்புமனு தாக்கல் நிறைவு – செப்டம்பர் 22

வேட்புமனு பரிசீலனை – செப்டம்பர் 23

வேட்புமனு திரும்ப பெறுதல் – செப்டம்பர் 25

வாக்கு எண்ணிக்கை – அக்டோபர் 12

Spread the love